இவரைப் போலவும் இருக்க முடியுமா?
தினமும் காலை ஒன்பதரை மணியளவில் அவசர அவரசமாக பேருந்தில் ஏறி அலுவலகம் செல்வது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு எப்போதும் போல அதே அவசரத்தில் பேருந்தில் ஏறினேன். நமக்குள் எவ்வளவு பதட்டம் இருந்தாலும் , அதனால் பேருந்தின் வேகம் அதிகம் ஆகப்போவதில்லை என்பது மூளைக்கு தெரிந்தாலும் மனதுக்கு புரியாதே. பதட்டம் குறையவே இல்லை. இன்னிக்கும் லேட் தான் என்ற டென்ஷனோடு காலியான இருக்கை இருக்கிறதா என்று கண்கள் தேடின. பெண்கள் இருக்கை ஒன்று காலியானதை கண்டதும் பால் கிண்ணத்தை கண்ட பூனையைப் போல கூட்ட நெரிசலில் அடித்து பிடித்து போய் அமர்ந்தேன். "ஹப்பாடா.. அடுத்த அரை மணி நேரத்திற்கு காலையில் மிஸ் பண்ண தூக்கத்தை catch up பண்ணிக்கலாம்" என்ற நிம்மதி. ஆனால் அது நடக்கவில்லை. அதை விட விலைமதிப்பற்ற அனுபவம் கிடைத்தது. அதற்கு காரணமாக இருந்த அந்த பெண்மணியை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.
எனது இருக்கையின் அருகே நின்றுக்கொண்டிருந்தார் அந்த பெண். அவரது பெயரை கடைசி வரை நான் கேட்கவே இல்லை. அவருக்கு சுமார் 55 வயது இருக்கும். ஒரு சாதாரணமான கிராமத்து பெண்மணி. அவரது பேச்சில் நான் கண்ட தெளிவு வேறு எங்குமே கண்டதில்லை, கேட்டதுமில்லை.
"என்ன..டென்ஷன்-ஆ இருக்கீங்க. Traffic அதிகமா இருக்கே-னு டென்ஷன்-ஆ? என்ன பிரயோஜனம்? Traffic ஜாஸ்தியா இருந்த அந்த 7-Up ad-ல தனுஷ் டான்ஸ் ஆடுவாரே, அந்த மாதிரி ஜாலியா யோசிக்க பழகிக்குங்க.. அப்படியே கொஞ்ச நேரத்துல எறங்க வேண்டிய இடம் வந்துடும்" என்று பேச்சை தொடங்கியவர், இறங்கும் வரை பல விஷயங்கள் பேசிக்கொண்டே வந்தார்.
"என் ஊரு பண்ருட்டி. எனக்கு ரெண்டு பொண்ணு, ரெண்டு பையன். ரெண்டாவது பொண்ணோட புருஷன் ரொம்ப கொடுமைக்காரன். போன மாசம் ரெண்டு பேருக்கும் ஒரே சண்டை. சண்டை ல அவளோட காதை பிடிச்சு இழுத்துட்டான். கையோட ஒரு பீஸ் கிழிஞ்சு வந்துருச்சு. ஊர்லையே வைத்தியம் பார்த்தோம். ஆனா சரி வரல. அங்க தைச்சு வெச்சாங்க..ஆனா அது கல் மாதிரி ஆகிடுச்சு இப்போ. அதான் இங்க மெட்ராஸ்-ல பெரிய ஆஸ்பத்திரி ல நல்லா பாக்கறாங்க-னு இங்க கூட்டிக்கிட்டு போறேன்.. அவ புருஷன என்னால கொஞ்சம் மிரட்டி வெக்க முடியும்..அது ஏன், தடி மாடு மாதிரி ரெண்டு பசங்க இருக்காங்களே..அவங்கள விட்டு அவன் கைய கால ஒடச்சு உக்கார வெக்கலாம்..ஆனா நாளை மேற்பட்டு என் மச்சான விட்டு என்ன அடிச்சவ தானே நீ-னு என் பொண்ணு வாழ்க்கைய பாழடிச்சுருவான். அதான் சும்மா இருக்கேன்."
"நல்லா தான் படிச்சுருக்கேன் நான். ஆனா கல்யாணம் ஆனா புதுசு ல எங்க வீட்டுக்காரர் 'பொம்பள சம்பாதிச்சு அதுல நான் சாப்ட மாட்டேன். வீட்லயே உக்காரு' னு சொல்லிட்டாரு. அதான் பசங்கள வளர்த்து அப்படியே வாழ்க்கைய ஓட்டிட்டேன். ஆனா இப்போ கூட மனசுல எந்த குறையும் இல்ல.. நல்லா டிவி பார்ப்பேன். இந்த விளம்பரங்கள் எல்லாம் பார்க்கும்போது ரொம்ப சிரிப்பா, சந்தோஷமா இருக்கும் . ஏதோ ஒரு சாக்லேட் விளம்பரம் ஒன்னு வருமே.. பொம்பள-னு நெனச்சு queue ல நிக்கறவன திட்டுவான்..ஆனா அது பையனா இருக்கும். அந்த பையனோட அப்பா-னு நெனச்சு திட்டுவான் ஆனா அது அம்மாவா இருக்கும். தமாஷா இருக்கும் அந்த விளம்பரம். விளம்பரம் எல்லாம் நல்லா ரசிச்சு பார்ப்பேன்."
"எங்க வீட்டுக்காரர் கூட கொஞ்ச கோவமான சுபாவம் தான்..ஆனா இப்போ கூட பாருங்க. பொண்ணுக்கு வைத்தியம்-னு சொன்னதும் காலைல ஆறு மணியிலேர்ந்து ஆஸ்பத்திரி ல காத்திருக்கார் . வீட்டுல நெறய சண்ட வரும்..அப்போ எல்லாம் அவரு குரல ஒசத்தி பேசினா நான் வாய மூடிக்குவேன். நான் சத்தமா பேசினா அவரு silent -ஆ இருப்பாரு. இப்படியே நெய்க்கு தொண்ணையும் , தொண்ணைக்கு நெய்யுமா வாழ்ந்து பழகிட்டோம்."
இப்படி மெய்மறந்து பேசிக்கொண்டு வந்தார் அந்த பெண்மணி. திடீரென்று அவரது அலைபேசி அடித்தது. மறுபக்கம் கணவர். "ஹலோ ஹலோ ..மாமா இதோ வந்துகிட்டே இருக்கேன்.. பஸ் ல தான் இருக்கேன்..கொஞ்ச நேரத்துல வந்துருவேன்.." என்று சொல்லி முடிப்பதற்கும் அவர் இறங்க வேண்டிய நிறுத்தம் வருவதற்கும் சரியாக இருந்தது. "சரிங்க..ஏதோ பேசிக்கிட்டே வந்துட்டேன். நேரம் போனதே தெரியல ல..நான் வரட்டுமா?" என்று கிடு கிடுவென பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றார்.
அந்த தருணம் மனதில் வேறு எதுவுமே ஓடவில்லை, "இவரைப் போலவும் இருக்க முடியுமா?" என்ற எண்ணத்தைத் தவிர.
----
இந்த அனுபவம் எனக்கு நடந்தது அல்ல. என்னுடைய அம்மா என்னிடம் பகிர்ந்து கொண்டது. அவரது சொற்களிலேயே இதை எழுத முயற்சித்தேன். கொஞ்சம் கற்பனைத் தூவல்கள் (மிகக்குறைவு) அங்கும் இங்குமாக. படித்து ரசிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. நாம் எவ்வளவோ கொடுத்து வைத்திருந்தாலும், குறை கூறுவதில் வல்லவர்கள், என்னையும் சேர்த்து சொல்கிறேன். இவரைப்போல் சிறிய விஷயங்களில் நம்மால் மகிழ்ச்சியைக் காண முடியுமா?
இப்படிப்பட்ட சராசரி மனிதர்களிடம் இருந்து நாம் ஒரு பாடம் கற்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. முடியுமா? யோசிக்கத் தூண்டுகிறது இந்த சம்பவம்.
#நூறுநாள் மகிழ்ச்சி பதிவுகளின் கீழ் நாள்-8 ஆன இன்றைய தினம் மகிழ்ச்சியைப் பற்றிய புரிதல் அதிகரித்ததில் #மகிழ்ச்சி.
<Image Source: Internet>
இப்படிக்கு
உங்கள் ஹரி
Actually to l thought that it was ur own experience, liked the phraseகொஞ்சம் கற்பனைத் தூவல்கள்... Good read...
ReplyDelete